அதிமுக பொதுக்குழு தீர்மானம் – இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல்
அதிமுகவில் ஒற்றைத்தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 23ஆம் தேதி, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஆனால், அதில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் வருகின்ற 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். இதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ஜூலை 11 பொதுக்குழுவிற்கு தடைகோரி நீதிமன்றத்தை நாட முடிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக பதவிகளில் மாற்றம் கொண்டு வர தற்காலிக தடை கோரவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நீதிமன்றத்தில் தங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், தேர்தல் ஆணையத்தை நாடவும் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து தற்போது ஈபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் கட்சி உறுப்பினர்களின் விருப்பப்படி ஜனநாயக முறைப்படி எடுக்கும் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தக்கூடாது என உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.