கொலம்பிய தேர்தல் முடிவுகள் தரும் நிஜமான மாற்றம்? : சண் தவராஜா
உலகின் பல நாடுகளிலும் நடைபெறும் அரசுத் தலைவர் தேர்தல்களில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் ஆள் மாற்றங்களாக இருப்பதையே பார்த்து வந்திருக்கின்றோம். ஆளுங் கட்சி, எதிர்க் கட்சி என்பவற்றின் வேட்பாளர்கள் மாறிமாறி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினாலும் – ஒருசில சிறிய மாறுதல்கள் தவிர – முன்னைய ஆட்சியின் கொள்கைகளே மாற்றமின்றி நீடிப்பதைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. ஆனால், தற்போது கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமோ உண்மையான ஆட்சி மாற்றமாகவும், பல பத்தாண்டுகளாக கொலம்பிய அரசியலில் நீடித்துவந்த நிலைமையின் காட்சி மாற்றமாகவும் அமைந்திருக்கின்றது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியா பல்லுயிர் வளத்தைக் கொண்டதொரு நாடு. பிரேசில் நாட்டுக்கு அடுத்ததாக அதிக பல்லுயிர் வளத்தைக் கொண்ட நாடாக இருந்த போதிலும், உலக அரங்கில் அந்த நாட்டின் பெயர் போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஆயுத வன்முறை போன்ற விடயங்கள் தொடர்பாகவே பிரபலமாக உள்ளது. தென் அமெரிக்கப் பிராந்தியத்தைத் தனது கொல்லைப்புறமாகக் கருதிச் செயற்பட்டுவரும் அமெரிக்க ஏகாதிபத்தியம், இடதுசாரிகளின் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே. அத்தகைய கொள்கையை அடியொற்றி வலதுசாரி ஆட்சியாளர்களைப் பதவியில் அமர்த்தி அழகுபார்க்கும் அமெரிக்க நிர்வாகம் அவர்கள் எத்துணை தூரம் அடக்குமுறைகளையும், மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மேற்கொண்டாலும் கண்டுகொள்வதில்லை.
1948 ஏப்ரல் 9 ஆம் திகதி அரசுத் தலைவர் தேர்தல் பரப்புரைகளின் போது இடதுசாரி வேட்பாளரும், அந்தத் தேர்தலில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டவருமான ஜோர்ஜ் எலேசன் கைற்றான் படுகொலை செய்யப்பட்டார். அதன் மூலம் ஒரு இடதுசாரி ஆட்சி கொலம்பியாவில் ஏற்படுவது தடுக்கப்பட்டது. அன்றிலிருந்து 72 ஆண்டுகளின் பின்னர், 2022 யூலை 19ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி வேட்பாளரும், முன்னாள் போராளியுமான குஸ்ராவோ பெற்ரோ வெற்றிபெறும் வரை வலதுசாரி அரசுத் தலைவர்களின் ஆதிக்கமே கொலம்பிய அரசியலில் நீடித்தது.
அமெரிக்க நிர்வாகத்தின் தீவிர ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இவர்கள் நேட்டோ அமைப்பில் தம்மை இணைத்துக் கொண்டது மட்டுமன்றி 1950களின் முற்பகுதியில் நடைபெற்ற கொரிய யுத்தத்திலும் கொலம்பியப் படைகளைப் பங்கு கொள்ளச் செய்தனர். கொரிய யுத்தத்திற்கு – அமெரிக்கா சார்பில் – படைகளை அனுப்பிவைத்த ஒரேயோரு தென்னமெரிக்க நாடு கொலம்பியாவே.
இம்முறை கொலம்பிய அரசுத் தலைவர் தேர்தலில் பங்கு கொண்ட மக்கள் உண்மையான மாற்றத்தை நோக்கியே வாக்களித்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. பாரம்பரிய அரசியல்வாதிகள் எவருமே இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகவில்லை. அந்தளவு தூரம் கொலம்பிய மக்கள் கடந்தகால அரசியல்வாதிகளையும், அரச இயந்திரத்தையும் வெறுத்து வந்துள்ளார்கள் என்பது புரிகின்றது. தற்போது அரசுத் தலைவராக – ஆகஸ்ட் 7ஆம் திகதி புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அரசுத் தலைவர் பதவியைப் பொறுப்பேற்கும் வரை – உள்ள இவான் டூக் கொலம்பிய அரசியல் வரலாற்றிலேயே அதிகம் செல்வாக்கிழந்த அரசுத் தலைவராக வரலாற்றில் தன்னைப் பதிவு செய்து கொண்டுள்ளார். அவரது ஆட்சிக் காலத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக, தொழிற் சங்கங்களும், மக்களும் மேற்கொண்டுவந்த தொடர்ச்சியான வெகுஜனப் போராட்டங்களே இன்றைய மாற்றத்துக்குப் பெரிதும் காரணம் எனலாம்.
மே 29இல் நடைபெற்ற முதல்சுற்றுத் தேர்தலில் குஸ்ராவோ பெற்ரோ 40.3 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ‘கொலம்பிய ட்ரம்ப்’ என வர்ணிக்கப்படும் ரொடல்போ ஹெர்னான்டஸ் 28.1 விழுக்காடு வாக்குகளையே பெற்றிருந்தார். 39 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட கொலம்பியாவில் 21 மில்லியன் மக்கள் அன்று வாக்களித்திருந்தனர் அது மொத்த வாக்களர்களில் 54.98 விழுக்காடாக இருந்தது.
இரண்டாவது சுற்றில் பெற்ரோ வெற்றிபெறக் கூடும் என்ற செய்தி வலதுசாரிகள் மத்தியிலும், ஊழல் மிகுந்த படைத்துறையினர் மத்தியிலும் பீதியை உருவாக்கியிருந்தது. அதன் விளைவாக எப்பாடு பட்டாவது தமது நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என நினைத்த வலதுசாரிகளும், மேட்டுக்குடியினரும் ஹெர்னான்டஸை ஆதரிக்கும் முடிவுக்கு வந்திருந்தனர். மறுபுறம், மக்கள் போராட்டங்களின் விளைவால் உருவாகியிருந்த இடதுசாரி எழுச்சியைத் தக்கவைக்க அவர்களது அணியினரும் முடிவு செய்தனர். இதன் விளைவாக இரண்டாவது சுற்றில் 58.9 விழுக்காடு மக்கள் வாக்களிப்பில் பங்கு கொண்டனர். இதில் பெற்ரோ 50.44 விழுக்காடு வாக்குகளையும், ஹெர்னான்டஸ் 47.31 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.
கொலம்பிய சமூகம் எவ்வாறு பிளவுண்டு கிடக்கின்றது என்பதற்கு இந்த வாக்களிப்பு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. மிகக் குறைந்த வாக்கு விகிதத்திலேயே ஒருவர் வெற்றிபெற்று அரசுத் தலைவராகின்றார் என்றால் அவரது தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களும் பெருமளவில் உள்ளார்கள் என்பதே யதார்த்தம். மக்கள் தொகையில் அரைவாசிப் பேர் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரான அரசியில் நிலைப்பாட்டில் உள்ளார்கள் எனில் அந்த நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலை எழுவது இயற்கையே. வெற்றிபெற்ற அரசுத் தலைவர் எத்தகைய புரட்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்தாலும் நடைமுறையில் அது என்னவாகும் என்ற ஐயம் இருக்கவே செய்கிறது.
நடைமுறையில் பார்க்கும் போது, பெற்ரோவின் வெற்றி கொலம்பிய மக்களுக்கு அதிக நன்மைகைளைப் பெற்றுத் தர உள்ளதோ இல்லையோ அயல்நாடான வெனிசுவேலாவுக்கு உடனடி நன்மைகள் காத்திருக்கின்றன. வெனிசுவேலாவில் உள்ள நிக்கலஸ் மடுரோ தலைமையிலான இடதுசாரி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான அனைத்துத் திரைமறைவு வேலைகளையும் கொலம்பிய மண்ணில் இருந்தே அமெரிக்க மேற்கொண்டு வருகின்றது. அமெரிக்க உள்ளிட்ட மேற்குலகினால் வெனிசுவேலாவின் ‘உத்தியோகபூர்வ அதிபர்’ என அங்கீகரிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதியான யுவான் குவைடோவின் செயற்பாடுகள் யாவும் இங்கிருந்தே ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகளுள் ஒன்றான வெனிசுவேலாவுடனான உறவுகளைப் புதுப்பித்தல் என்பதை பெற்ரோ நடைமுறைப்படுத்தினால் அமெரிக்கச் செயற்பாடுகளுக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும் என்பது சொல்லாமலேயே புரியும்.
இன்று கொழுந்து விட்டெரியும் ரஸ்ய-உக்ரைன் போரில் பிரதான காரணியாக விளங்குவது நேட்டோ எனப்படும் வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகளின் கூட்டணி. இந்த இராணுவக் கூட்டணியை மேலும் விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுவரும் நிலையில் அந்தக் கூட்டணியில் இருந்து விலகும் அறிவிப்பை பெற்ரோ வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது அமெரிக்க ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு மிகப் பாரிய அதிர்ச்சி வைத்தியமாக அமையலாம்.
அது மாத்திரமன்றி, அமெரிக்காவின் செல்வாக்கு வளையத்தினுள் இருந்து விடுபடும் கொலம்பியா, அதன் எதிரி நாடு எனப் பார்க்கப்படும் சீனாவின் பொருளாதாரக் கட்டமைப்பில் இணைந்து கொள்ளலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.
இத்தனையும் நடக்கும்போது கொலம்பியாவில் நடைபெற்ற மாற்றம் நிஜமான மாற்றமே என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இத்தனை மாற்றங்களையும் மேற்கொள்வதற்கு பெற்ரோ உயிரோடு இருக்க வேண்டுமே என்ற கவலையும் இயல்பாகவே எழுகின்றது. உள்நாட்டில் கறைபடிந்த இராணுவம், போதைப்பொருள் கும்பல்கள், அதற்கும் அப்பால் வல்லாதிக்க மனப்பான்மையுடன் கூடிய அமெரிக்க ஏகாதிபத்தியம்… இத்தனைக்கும் எதிராக பெற்ரோ தாக்குப் பிடிப்பானாரால் அதுவே ஒரு சாதனைதான். தாக்குப் பிடிப்பாரா?