ஜூலை 22ஆம் திகதியே பெற்றோல் கப்பல் வரும் ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் பிரதமர் ரணில் கவலையுடன் தெரிவிப்பு.

“இலங்கையில் எரிபொருள் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணவே முடியாது. அந்தளவுக்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதிதான் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது. எனவே, மக்கள் பொறுமை காக்க வேண்டும்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பிரதமர் தேசிய பத்திரிகைகள் மற்றும் தேசிய தொலைக்காட்சிகளின் ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பணிப்பாளர்களைச் சந்தித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் அவசர நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து இதன்போது ஊடகங்களுக்கு விளக்கினார்.

பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.சமரதுங்கவும் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதாரம் இந்த ஆபத்தான நிலையை அடைந்தது குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

நாட்டின் எரிபொருள் நிலைமையின் தற்போதைய நிலை குறித்து பிரதமரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

இந்தச் சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:-

“எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியிலே டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் 11 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலே கையிருப்பில் உள்ளது.

அத்துடன் 5 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கும் குறைவான பெற்றோலே கையிருப்பில் உள்ளது.

இவ்வாறான பின்னணியில், மீண்டும் 38 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் எதிர்வரும் 11 முதல் 15 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாட்டை வந்தடையவுள்ளது.

அத்துடன் 35 ஆயிரத்து 300 மெற்றிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஜூலை 22 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.