உள்ளாட்சி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பு.. சுயேட்சையாக வேட்பாளர்கள் போட்டி

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இரண்டு மாவட்ட கவுன்சிவர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 34 பதவிகளுக்கு மட்டும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை சின்னங்களை ஒதுக்க உள்ளது.அதிமுகவில் நிலவும், ஒற்றை தலைமை விவகாரத்தால் எழுந்த உட்கட்சி பூசல் காரணமாக, வேட்புமனுவில் உள்ள Form A, Form B ஆகியவற்றில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாமல் உள்ளதால் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டைஇலை சின்னம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி நகராட்சி மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் போட்டியிடாமல் அதிமுக புறக்கணித்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் வார்டு 36, தஞ்சாவூர் மாநகராட்சியில் வார்டு 8, தேனி பெரியகுளம் நகராட்சியில்

வார்டு 26, மயிலாடுதுறை நகராட்சியில் வார்டு 19 ஆகியவற்றில் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களிலும், புதுக்கோட்டை வார்டு 7, கடலூர் வார்டு 26 ஆகியவற்றில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவில்லை.

மீதமுள்ள ஒன்றிய கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர், மற்ற இதர ஊராட்சி பதவியிடங்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டாலும் அவர்களுக்கு இரட்டை இல்ல சின்னம் கிடைக்காமல் சுயேட்சை சின்னங்களே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.