உதய்பூர் கொலையாளிகளுக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பா? – என்ஐஏ விசாரணை
ராஜஸ்தானில் தையல்காரர் தலை துண்டித்து கொல்லப்பட்டதைக் கண்டித்து 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தன்மண்டி பகுதியில் தையல்காரர் கன்னையா லால் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் ஐந்து நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தையல்காரர் கொலை சம்பவத்தை கண்டித்து 2-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. ராஜ்சமந்த் மாவட்டம் பீம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதற்றமான பகுதிக்குள் நுழைய முயன்றதால் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
அப்போது போராட்டக்காரர்கள் கற்கள் வீசி தாக்கியதில் காவலர் மண்டை உடைந்தது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.இந்தக்கொலை குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை ராஜஸ்தான் அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில் தையல்காரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களில் ஒருவர் கடந்த 2014-ம் ஆண்டு பாகிஸ்தானின் காராச்சி நகருக்கு சென்று வந்ததாகவும், அவருக்கு பாகிஸ்தானை சேர்ந்த தாவட் இ இஸ்லாம் என்ற அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் ராஜஸ்தான் மாநில காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். கன்னையா லாலுக்கு சமூக வலைதள பதிவு காரணமாக மிரட்டல் வந்ததாகவும் ஒரு வாரம் கடைக்கு வராமல் இருந்தவர் திங்கள்கிழமைதான் வந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம், இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.