கோட்டா உடனே வீடு சென்றாலே நாட்டுக்கு விடிவு சந்திரிகா அம்மையார் எடுத்துரைப்பு.
“ஜனாதிபதிக் கதிரையில் கோட்டாபய ராஜபக்ச இருக்கும் வரைக்கும் இலங்கைக்குச் சர்வதேசம் உதவ முன்வராது. அதேவேளை, இந்தப் பொருளாதார நெருக்கடியும் தீராது மேலும் உக்கிரமடையும். எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலகி வீடு சென்றால்தான் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும்.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கோட்டாபய ஜனாதிபதிப் பதவியில் இருக்கும் வரைக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாலும் ஒன்றும் செய்ய முடியாது. அதனால்தான் பிரதமர் ரணில் நாளாந்தம் ஊடகங்கள் முன்னிலையில் பிரச்சினைகளை மாத்திரம் கூறுகின்றாரே தவிர அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கின்றார் இல்லை.
இலங்கையின் தற்போதைய நிலைமை நாளாந்தம் மோசமடைகின்றது. மக்கள் பொறுமை இழந்துவிட்டார்கள்.
இந்த நாட்டை மீட்க வேண்டுமெனில் ராஜபக்ச குடும்பம் கூண்டோடு வீடு செல்ல வேண்டும். அப்போதுதான் நாட்டுக்கு விடிவு கிடைக்கும்” – என்றார்.