மாணவிகள் துஷ்பிரயோகம்: ஆசிரியருக்கு மறியல் நீடிப்பு – மேலும் இரண்டு வழக்குகள் தாக்கல்.
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் எனக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியல் உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதிவான் ரி.சரவணராஜா முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர் காணொளி தொழில்நுட்பத்தினூடாக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் 6 மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சட்ட மருத்துவ பரிசோதனையில், இரண்டு மாணவிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
13 மற்றும் 17 வயதான மாணவிகளே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் நீதிவானிடம் அறிவித்துள்ளனர்.
அதற்கமைய, சந்தேகநபரான ஆசிரியருக்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முல்லைத்தீவைச் சேர்ந்த 28 வயதான ஆசிரியரே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியருக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த மாணவர் ஒருவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளிடம் மேலும் வாக்குமூலம் பெறப்படவுள்ளதால், சந்தேகநபரை ஆசிரியரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
முல்லைத்தீவில் மேலதிக வகுப்புக்களை நடத்தும் மேற்படி ஆசிரியர் ஒருவர், திட்டமிட்ட வகையில் பாடசாலை மாணவிகளை அச்சுறுத்திப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
மாணவர்கள், மாணவிகள் மத்தியில் காதல் தொடர்புகளை ஏற்படுத்தும் வகையிலான சூழலை ஆசிரியர் உருவாக்கியமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணவிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை ஆறு மாணவர்கள் ஊடாக சந்தேகநபரான ஆசிரியர் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மாணவிகளிடம் காண்பித்து அவர்களைச் சந்தேகநபர் அச்சுறுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அச்சுறுத்தலுக்கு இலக்கான மாணவிகளை சந்தேகநபர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ள நிலையில், அவர்களில் ஒரு மாணவி கடந்த வாரம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வௌிக்கொணரப்பட்டன.
குறித்த ஆசிரியர் மூன்று வருடங்களாகப் மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.