கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்.

இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்த ஒரே டெஸ்ட் 2021-ம் ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட போட்டியாகும். கடந்த ஆண்டு ஆகஸ்டு- செப்டம்பரில் இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் 4 டெஸ்டுகளில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மற்றொரு போட்டி ‘டிரா’வில் முடிந்ததால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய பயிற்சியாளர்கள் மட்டத்தில் கொரோனா ஊடுருவியதால் கலக்கமடைந்த இந்திய வீரர்கள் இறுதி டெஸ்டில் விளையாட மறுத்தனர். இதனால் தள்ளிவைக்கப்பட்ட அந்த டெஸ்ட் தான் தற்போது நடக்க உள்ளது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இந்திய அணி கடைசியாக 2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. 15 ஆண்டுக்கு பிறகு மீண்டும் அங்கு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு கனிந்துள்ளது. மேலும், இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தொடர் ஒன்றில் 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்றது கிடையாது. எனவே இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் அது புதிய வரலாறாக பதிவாகும்.

இந்த போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் வருமாறு:- இந்தியா: சுப்மான் கில், ஹனுமா விஹாரி அல்லது மயங்க் அகர்வால், புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்குர் அல்லது அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது ஷமி, முகமது சிராஜ் அல்லது உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து: அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், மேத்யூ போட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாக் லீச். போட்டியின் போது முதல் இரு நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடைசி 3 நாட்கள் வெயில் அடிக்கும் என்று அங்குள்ள வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.