இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சுக்கு நெருக்கடி கொடுத்த ஆஸி.
இலங்கை அணிக்கு நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் கெமரோன் கிரீன் மற்றும் அலெக்ஸ் கெரியின் சிறந்த இணைப்பாட்டத்தின் உதவியுடன் அவுஸ்திரேலிய அணி பலமான நிலையை அடைந்துள்ளது.
போட்டியின் நேற்றைய ஆட்டநேர நிறைவில் இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியானது 98 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்றைய தினம் களமிறங்கியது.
குறிப்பாக இன்றைய ஆட்டநேரத்தின் முதல் பகுதியில் கடுமையான மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக தாமதமாக போட்டி ஆரம்பமாகியது. குறிப்பாக மதியபோசன இடைவேளையின் பின்னர் போட்டி ஆரம்பித்தது.
அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு தனன்ஜய டி சில்வா, டிராவிஷ் ஹெட்டின் விக்கெட்டினை கைப்பற்றி அழுத்தத்தை கொடுத்தார். எனினும், உஸ்மான் கவாஜா தன்னுடைய அரைச்சதத்தை பதிவுசெய்ததுடன் மறுமுனையில் கிரிஸ் கிரீன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவர்கள் இருவரும் 57 ஓட்டங்களை பகிர்ந்தபோதும், உஸ்மான் கவாஜா 71 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஜெப்ரி வெண்டர்சேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஜெப்ரி வெண்டர்சே தன்னுடைய கன்னி டெஸ்ட் விக்கெட்டினை கைப்பற்றினார்.
ஆனால், இதன்பின்னர் இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு அலெக்ஸ் கேரி மற்றும் கிரிஸ் கிரீன் வேகமாக ஓட்டங்களை குவித்து அவுஸ்திரேலிய அணிக்காக மிகச்சிறந்த இன்னிங்ஸை பகிர்ந்தனர்.
இவர்கள் இருவரும் 84 ஓட்டங்களை பகிர்ந்திருந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியானது, இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை கடந்தது. அதேநேரம், 45 ஓட்டங்களை பெற்றிருந்த அலெக்ஸ் கெரி ரமேஷ் மெண்டிஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய கிரிஸ் கீர் 77 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இன்றயை ஆட்டநேரம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்படும் வரையில் அவுஸ்திரேலிய அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 313 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் பெட் கம்மின்ஸ் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருப்பதுடன், இலங்கை அணியின் பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், ஜெப்ரி வெண்டர்சே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை அவுஸ்திரேலிய அணியானது இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 101 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.