தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தேனியை சேர்ந்த ஏ.சேர்மராஜன் பதவியேற்பு..
தேனி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கே.அய்யாசாமி மற்றும் ரத்தினம்மாள் தம்பதியின் மூத்த மகன் ஏ.சேர்மராஜன் என்ற ஏ.எஸ்.ராஜன். வணிகர் குடும்பத்தில் பிறந்த இவர் 1987 ஆம் ஆண்டு நடந்த மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். ஒருங்கிணைந்த பீகார் மாநிலம், ராஞ்சி மாவட்டத்தில் தன் பணியை தொடங்கினார்.
பின்னர், கொள்ளையர்கள், ரவுடிகளின் ஆதிக்கம் நிறைந்த பல மாவட்டங்களிலும் பணியாற்றினார். என்கவுண்டர் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மூலம் கொள்ளையர்கள், ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினார். சட்ட ஒழுங்கை நிலைநாட்டி, குற்றச் சம்பவங்களை வெகுவாக குறைத்து, பீகார் முழுவதும் புகழடைந்தார். பின்னர் மத்திய உளவுப் பிரிவு (ஐ.பி.) அதிகாரியாக டெல்லி, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றினார்.
ஐ.பி.யில் சிறப்பு இயக்குனராக பணியாற்றி வந்த ஏ.எஸ்.ராஜன், ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக பதவி ஏற்றுள்ளார்.
தேனி மாவட்டம், ஓடைப்பட்டி அரசு பள்ளியிலும், நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்த இவர், உத்தமபாளையத்தில் உள்ள காஜி கருத்த ராவுத்தர் கல்லூரியிலும், மதுரை எஸ்.வெள்ளைச்சாமி கல்லூரியிலும் வரலாறு பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.