இனவெறிச் செயற்பாடுகளால்தான் கோட்டா அரசுடன் சர்வதேசம் கோபம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் சுட்டிக்காட்டு.
“இனவாதத்தை எப்போதும் தமது பிழைப்புக்காகப் பயன்படுத்தும் குழுக்கள் நாட்டுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போதைய அரசுடன் உலகின் பல நாடுகள் கோபமடைந்துள்ளமைக்கான காரணம் இனவாத, இனவெறிச் செயற்பாடுகளே ஆகும்.
– இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நிலவும் நெருக்கடி மிக்க நிலைமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ள அரசியல் கட்சிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார். அதன் மூன்றாம் கட்டம் இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ், புதிய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நான் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராகச் செயற்பட்டபோது , கட்டார் நிதியத்தின் கிளையொன்றை இலங்கையில் திறப்பதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று அதனைத் திறப்பதில் நான் கலந்துகொண்டேன். அன்று அதனை இலக்காகக் கொண்டு எனக்கு எதிராகப் பாரதூரமான விமர்சனங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இனவாதத்தைத் தூண்டி முன்னெடுக்கப்பட்ட பிரசாரத்தின் ஊடாக சமூகத்தினுள் தவறான புரிதலை ஏற்படுத்துவதற்குச் சில தரப்பினர் செயற்பட்டனர். குறுகிய இனவாத நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டார் போன்ற நாடுகளை அவர்கள் ஆத்திரமடையச் செய்தனர்.
இவ்வாறு அன்று போராட்டம் நடத்திய குழுவினர் இன்று அந்நாட்டுக்கு எரிபொருளைப் பெறுவதற்காகச் சென்றுள்ளனர். அன்று மோசமாகச் சித்தரிக்கப்பட்ட கட்டார், இன்று எவ்வாறு சிறந்த நாடாக மாறியது?
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இந்தச் சந்தர்ப்பத்தில் மிக விரைவாகச் செய்ய வேண்டியது தரப்படுத்தல்களில் இலங்கையை முன்னேற்றுவதற்காகப் பொருளாதார மாறுபாடுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அறிந்து கொள்ளும் எந்தவொரு நாடும், முதலில் செய்தது சர்வதேசத்துடன் முறையானதொரு கொடுக்கல் – வாங்கலை ஏற்படுத்திக் கொண்டமையாகும். எமது நாடு செய்தது அதற்கு முரணான செயற்பாட்டையே ஆகும்.
எந்தவொரு நாட்டுக்கும் சர்வதேசத்தால் தட்டில் வைத்து நிவாரணம் வழங்கப்பட மாட்டாது. அதற்கு முறையான, வெளிப்படையான வேலைத்திட்டம் தேவை” – என்றார்.