உதய்பூர் படுகொலையை பாராட்டி பதிவுகள்.. சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
உதய்பூரில் நிகழ்ந்த படுகொலையை பாராட்டியோ நியாயப்படுத்தியோ பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் ஆங்கிலத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்தை பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன. கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
எனினும், நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளத்தில் கருத்து பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் நுபுர் சர்மாவை ஆதரித்து கருத்து பதிவிட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது தையற்கலைஞர் கன்னையா லால் சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவது அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கொலை குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதேபோல், கன்னையா லால் படுகொலையை நியாயப்படுத்தி பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டுகொலையை பாராட்டியோ நியாயப்படுத்தியோ பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.