2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் சேர்ப்பு.
கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்தது. போட்டியின் 2-ம் நாள் நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. இங்கிலாந்து தொடக்க வீரர்களாக அலெக்ஸ் லீஸ் மற்றும் சக் க்ரவ்லி களமிறங்கினர். அலெக்ஸ் 6 ரன்னிலும், சக் 9 ரன்னிலும் வெளியேறினர்.
அடுத்து வந்த ஒலி போப் 10 ரன்னிலும், ஜோ ரூட் 31 ரன்னிலும், ஜக் லீட்ச் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஜானி ப்ரிஸ்டோவ் 12 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் (0) களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் கேப்டன் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் இந்தியாவை விட இங்கிலாந்து 332 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.