விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸ் வீராங்கனையிடம் வீழ்ந்தார் ஸ்வியாடெக்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), 37-ம் நிலை வீராங்கனை அலிசே கோர்னெட்டை (பிரான்ஸ்) சந்தித்தார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனுபவம் வாய்ந்த கோர்னெட் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் சர்வதேச டென்னிசில் தொடர்ச்சியாக 37 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த ஸ்வியாடெக்கின் வீறுநடை முடிவுக்கு வந்தது. பிரெஞ்சு ஓபனை வென்ற ஸ்வியாடெக் விம்பிள்டனிலும் மகுடம் சூடுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்ட நிலையில் 3-வது சுற்றுடன் நடையை கட்டியிருக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் அமன்டா அனிசிமோவா (அமெரிக்கா) 6-7 (4-7), 6-2, 6-1 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் கோகோ காப்பை தோற்கடித்தார். சிமோனா ஹாலெப் (ருமேனியா), ஹார்மோனி டான் (பிரான்ஸ்), பெட்ரா மார்டிச் (குரோஷியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.