காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தந்தையை தாயாருடன் சேர்ந்து கொலை செய்த மகன்! பதுளையில் பயங்கரம்; காட்டில் வீசப்பட்டது சடலம்.
தந்தை ஒருவர் மகனின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அவரது மனைவியும் மகனும் சேர்ந்து மண்வெட்டியால் தாக்கிக் கொலைசெய்த கொடூர சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.
பதுளை – கஹட்டருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபரே இவ்வாறு மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் 33 வயதான மனைவியும் அவரது 17 வயதான மகனுமே இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும், அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பதுளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகனின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரைத் துன்புறுத்தியதே கணவரின் கொலைக்கான காரணம் எனச் சந்தேகநபரான மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், மனைவி கடந்த மே மாதம் 31ஆம் திகதி இந்தக் கொலையை செய்து, மகனுடன் சேர்ந்து சடலத்தைக் காட்டில் வீசிவிட்டு பொலிஸ் நிலையத்தில் தனது கணவனைக் காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.