விஜயகாந்த் உடல்நிலையில் தொய்வு.. பிரேமலதா தகவல்
விஜயகாந்த் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்துவருகிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்துக்கொள்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் விஜயகநாந்தின் கால் விரல்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டிருந்த அறிவிப்பில், நீண்ட வருடங்களாக இருக்கும் நீரழிவு பிரச்சனையால் (சர்க்கரை நோய்) தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.
மேலும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரு நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று சென்னை வந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில்,மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ஒரு பெண் வேட்பாளராக திரவுபதி முர்முவுக்கு பெண் சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துகள். நல்ல வேட்பாளரை தேர்வு செய்த பிரதமருக்கு வாழ்த்துகள். திரவுபதி முர்மு வெற்றி பெறுவது உறுதி. தமிழ்நாட்டுக்கும் பழங்குடியினருக்கும் நீண்ட தொடர்பு உண்டு. முருகனின் மனைவி வள்ளியும் பழங்குடியினத்தை சேர்ந்தவர் தான்.
திரவுபதி முர்மு வெற்றி பெற்று தமிழ்நாட்டில் உள்ள பழங்குடி மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் சேவை செய்வேன் என என்னிடம் கூறினார். அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து கருத்து சொல்ல விருப்பமில்லை. இருவரில் யார் வெற்றி பெற போகிறார், என்ன முடிவு ஆக போகிறது என்பதை காண காத்திருக்கிறோம்.
விஜயகாந்த் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மை. அவரை அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஊடகங்கள் அதனை பெரிதுப்படுத்த வேண்டாம். எங்கள் நிலையை புரிந்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.