வாரிசு, ஊழல் அரசியலுக்கான அடையாளம் டிஆர்எஸ் அரசு: பாஜக
தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசு வாரிசு மற்றும் ஊழல் அரசியலுக்கான அடையாளமாக மாறிவிட்டதாக பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தெலங்கானா குறித்த அறிக்கையை பாஜக தேசிய துணைத் தலைவர் டிகே அருணா முன்வைத்தார். கட்சியின் தேசிய செயற்குழு இதை ஒருமனதாக நிறைவேற்றியது.
இதுபற்றி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “பொருளாதாரம் மற்றும் சமூகக் கண்ணோட்டங்கள் என இரண்டிலும் தெலங்கானா மக்களின் பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுதொடர்பான வேதனையை தேசிய செயற்குழு வெளிப்படுத்தியது.
பாஜகவின் போராட்டத்துக்குப் பிறகே தெலங்கானா உருவானது. மாநிலத்திலுள்ள இளைஞர்கள் தியாகம் செய்துள்ளனர். ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் சிதைத்துவிட்டது. வாரிசு மற்றும் ஊழல் அரசியலின் முகமாக மாறியுள்ளது” என்றார் அவர்.
மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி பேசுகையில், “முதல்வர் சந்திரசேகர ராவ் 8 ஆண்டுகளாக தலைமைச் செயலகத்துக்குச் செல்லவில்லை. ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசியை மட்டுமே அவர் சந்தித்திருக்கிறார். சந்திரசேகர ராவ் படுக்கையறையைக் கூட ஒவைசியால் அணுக முடியும். அவர்கள் இருவரும் மாநிலத்தைக் கொள்ளையடிக்கின்றனர்” என்றார் கிஷன் ரெட்டி.