இலங்கை மீண்டெழ வேண்டுமெனில் கோட்டா – ரணில் வீடு செல்ல வேண்டும் – இராதாகிருஷ்ணன் எம்.பி. வலியுறுத்து.
“பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை மீண்டெழ வேண்டுமெனில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகி வீடு செல்ல வேண்டும்.”
– இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த அரசசார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடல் ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கையின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டு 56 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. முறையற்ற விதத்திலான பண அச்சீடு உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசின் பிற்போக்குத்தனமான ஆட்சிக் கொள்கையே இதற்குப் பிரதான காரணம்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. ஒருவரின் வங்கி வைப்பில் 10 இலட்சம் ரூபா இருந்திருந்தால் தற்போது அதன் உண்மையான பெறுமதி 5 இலட்சமாகவே இருக்கும். அந்தளவுக்குப் பொருட்களின் விலைகளும் எகிறியுள்ளன.
எனவே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை நீங்க வேண்டுமெனில் ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகுவதே சிறந்த தேர்வாக இருக்கும். தற்போதைய ஆட்சியாளர்களை சர்வதேச சமூகம்கூட ஏற்கவில்லை.
கட்டாரிலுள்ள முக்கிய நிறுவனமொன்றைத் தடைப் பட்டியலில் கோட்டா அரசு இணைத்தது. இதன்விளைவாகவே கட்டாரில் இருந்து எரிபொருளைப் பெறுவதில் அரசு திண்டாடுகின்றது. முறையற்ற – தெளிவற்ற – கொள்கையற்ற ஆட்சிப்போக்கே இதற்குக் காரணம்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குச் சர்வதேச சமூகத்துடன் சிறந்த தொடர்பு உள்ளது. அரபுலக நாடுகளுடனும் அவர் நட்புறவைப் பேணி வருகின்றபடியால் அவரால்தான் நாட்டை மீட்க முடியும்” – என்றார்.