போதும் இனிப் பதவி விலகுங்கள் – கோட்டா அரசிடம் சஜித் இடித்துரைப்பு – சஜித் அறைகூவல்.
“இந்த அரசால் இனிமேலும் தொடர்ந்து நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது. எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாகப் பதவி விலகுவதைத் தவிர வேறு மாற்று வழியில்லை.”
– இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்தக் கொடுங்கோல் அரசை அகற்றுவதற்கான மக்கள் போராட்டத்தைப் பெருமெடுப்பில் ஆரம்பிக்கவுள்ளோம். இதில் கட்சி, நிற பேதங்களை மறந்து அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இந்தத் தருணத்தில், நாட்டுக்கு எதிராக ஒரு கும்பலையோ அல்லது தனி நபரையோ பாதுகாப்பதை விடுத்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதில் தங்களை அர்ப்பணிக்குமாறு பாதுகாப்புத் தரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளை 5 நாட்களிலோ அல்லது 5 மாதங்களிலோ உடனடியாகத் தீர்க்க முடியாது.
அரசின் பொய்களை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது. இந்நாட்டு மக்களைத் தொடர்ந்தும் யாரேனும் ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ இடமளிக்கமாட்டோம்.
இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்பக் குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும். இதற்கப்பால் இந்நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனக் கூறும் பேச்சு மாயையானது” – என்றார்.