இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு கைது நடவடிக்கையால் தக்க பதிலடி – தொடரும் என்று டக்ளஸ் உறுதி.
“இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”
இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.
‘இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து வடக்கு கடல் வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமா?’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் இன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் என்பது இன்று நேற்று நடைபெறும் விடயமல்ல. நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. இதனைத் தடுப்பதற்கு இலங்கைக் கடற்படையினர் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்றுக்கூட அத்துமீறிய 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும்.
அதேவேளை, எரிபொருள் தட்டுப்பாட்டால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.