அமர்நாத் யாத்திரைக்காக எங்களை 43 நாட்கள் கடையை மூடச் சொல்கிறார்கள்: ஸ்ரீநகர் வியாபாரிகள் வேதனை
அமர்நாத் யாத்திரை முடியும் வரை 43 நாட்களுக்கு நாங்கள் யாரும் கடைகளைத் திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டு ஸ்ரீநகர் போலீசார் எங்கள் வாழ்வாதாரத்தையே முடக்குகின்றனர் என்று ஸ்ரீநகரைச் சேர்ந்த வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ரெஹ்மான் என்ற வியாபாரி ஆங்கில ஊடகம் ஒன்றில் கூறும்போது, “எங்கள் இதயத்தின் மையத்திலிருந்து அமர்நாத் யாத்திரையை வரவேற்கிறோம். இன்னும் சொல்லப்போனால் அமர்நாத் யாத்திரையின் போது கடைக்காரர்களுக்கு அதிக வியாபாரம் நடக்கும். யாத்திரிகர்கள் வரும் வாகனங்கள் ரிப்பேர் ஆனால் நாங்கள்தான் ரிப்பேர் சரி செய்த் கொடுப்போம். அவர்களை நம்பித்தான் எங்கள் வாழ்வாதாரமே உள்ளது. எங்கள் வேலைகளை எங்களிடமிருந்து பறித்துச் செல்லாதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
3 ஆண்டுகள் கழித்து அமர்நாத் யாத்திரை வியாழனன்று தொடங்கியது. இதற்காக ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல் நாளிலேயே பனிலிங்கத்தை 3000 பக்தர்கள் தரிசித்தனர். ஆகஸ்ட் 11ம் தேதி அமர்நாய் யாத்திரை முடிவுக்கு வருகிறது. 2019-ல் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்தானதையடுத்து அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.
பிறகு 2020, 21ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த 3 ஆண்டுகள் நடக்காததால் இந்த ஆண்டு பக்தர்கள் லட்சக்கணக்கில் கூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வியாபாரிகளின் அடையாளம் மற்றும் வர்த்தக சரிபார்ப்பு நடவடிக்கைகள் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்தான் 43 நாட்களுக்கு அமர்நாத் யாத்திரை முடியும் வரை கடையைத் திறக்க வேண்டாமென்று போலீசார் தடை விதித்துள்ளனர். இதனையடுத்து ஷாப் உரிமையாளர்கள் சிலர் அடையாளப்போராட்டம் நடத்தினர்.
ஆனால் போலீசார் ஒட்டுமொத்த அமர்நாத் யாத்திரை காலக்கட்டம் முழுதும் கடையைத் திறக்க வேண்டாம் என்று உத்தரவு போடவில்லை என்று அதே ஆங்கில ஊடக்த்தில் மறுத்துள்ளார். டிஆர்எப் போன்ற தீவிரவாத அமைப்புகள் யாத்திரைக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றனர், அதனால்தான் சிலபல கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக என்று போலீஸ் உயர்மட்டத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.