மாதவனின் “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” படத்தை ரஜினி காந்த் பாராட்டி உள்ளார்.
“ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” திரைப்படம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி 2022 உலகம் முழுதும் வெளியானது. இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என பன்மொழிகளில் படமாக்கப்பட்டது, மேலும் கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியானது.
நடிகர் R மாதவன் இப்படத்தில் அறிவியலாளர் நம்பி நாரரயணனாக நடித்திருப்பதுடன், இப்படத்தை தயாரித்து , எழுதி, இயக்கியும் உள்ளார்.
கிரையோஜனிக் இஞ்சின் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு தேச விரோதமாக விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள போலிசாரால் கைது செய்யப்பட்டார். பின் பல ஆண்டுகள் கழித்து, இவ்வழக்கில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என முடிவு செய்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியாளர், இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன், உளவுத்துறையால் தேசத்துரோகம் செய்ததாக கைதுசெய்யப்பட்ட பின்னணியில் உள்ள, உண்மையை வெளிப்படுத்தும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் CS இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர்களான ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே ஆகியோருடன் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான் மற்றும் சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளனர்.
இந்த படத்தில் ஷாருக்கான் மற்றும் சூர்யா நடித்துள்ளது பற்றி மாதவன் சில தகவல்களை சிலநாட்களுக்கு முன் பகிர்ந்துள்ளார். அதில், இந்த கேமியோ ரோலில் நடிக்க இருவரும் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்றும், சூர்யா விமான பயணச் செலவு, ஹோட்டல் செலவு ஆகியவற்றை அவரே செய்து மும்பையில் படப்பிடிப்பை முடித்து கொடுத்ததாகவும் கூறி மாதவன் நெகிழ்ந்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தினை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் மாதவன் மற்றும் படக்குழுவினரை பாராட்டி கடிதம் ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில்,”ராக்கெட்ரி திரைப்படம் – அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் – குறிப்பாக இளைஞர்கள்.
நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் திரு. நம்பி நாராயணன் அவர்களின் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன்.
இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும்.” என கூறியுள்ளார்.