‘காளி’ போஸ்டர் சர்ச்சை.. நடவடிக்கை எடுத்த இந்திய உயர்குழு ஆணையம்… நன்றி தெரிவித்த எச்.ராஜா
கையில் சிகரெட்டுடன் இருக்கும் காளி போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லீனா மணிமேகலை சமீபத்தில் தனது சமூக வலைத்தளங்களில் அவரது படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், காளி வேடமணிந்த ஒரு பெண்ணின் கையில் சிகரெட்டும், LGBTQ சமூகத்தினரின் கொடியும் இருந்தது. இன்னப்பிற கைகளில் தண்டாயிதம் சூலம் இருந்தது. இந்த புகைப்படம் இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தியதாக லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என டிவிட்டரில் ட்ரெண்டிங் செய்யப்பட்டது.
லீனா மணிமேகலை அதிகமாக ஆவணப்படங்களையும், சில திரைப்படங்களையும் எடுத்துள்ளார். சமீபத்தில் ‘மாடத்தி’ எனும் படத்தினையும் எடுத்து வெளியிட்டு இருந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தற்போது கனடாவின் டொரண்டோ பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த ஆவணப்படத்தின் சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை கூறும்போது, ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப் பார்த்தால் என்னை கைது செய்யும் எண்ணத்தை விட்டு லவ் யூ சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ‘காளி’ திரைப்படம் திரையிடல் சம்மந்தப்பட்ட அனைத்தையும் திரும்பப் பெறுமாறு அந்த படத்தை திரையிட்ட நிகழ்ச்சி குழுவினருக்கு ஒட்டாவா இந்திய உயர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஒட்டாவா இந்திய உயர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ‘அண்டர் தி டெண்ட்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காட்சிப்படுத்தப்பட்ட ஒரு திரைப்பட போஸ்டரில் இந்து கடவுளை அவமரியாதையாக சித்தரித்ததாக கனடாவில் உள்ள இந்து குழுக்களின் தலைவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, டொராண்டோவில் உள்ள எங்கள் துணைத் தூதரகம் இது குறித்து நிகழ்வின் அமைப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், பல இந்து அமைப்புகள் கனடா அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், கனடா அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பட்டாளார்கள் சர்ச்சைக்குரிய அந்த திரைப்படம் சம்மந்தப்பட்ட அனைத்தையும் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காளி தேவியை அவமதிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்திய இந்திய உயர் ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, காளி தேவியை இழிவுபடுத்தும் லீனா மணிமேகலை மற்றும் அவரது கூட்டாளிகளின் முயற்சியை தடுத்து நிறுத்தி விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஆணையத்திற்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல், இந்தியாவைச் சேர்ந்த இந்துத் தலைவர்களுக்கும், கனடாவில் உள்ள இந்துக் குழுக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.