16 தீர்மானங்கள்.. இடைக்கால பொதுச்செயலாளர் பதவி – அதிமுக பொதுக்குழுவின் முக்கிய அம்சங்கள்

அதிமுகவில் இடைக்கால பொது செயலாளர் பொறுப்பு வரும் 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படவுள்ளது. அதன்படி இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவுபடி அக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால் பொதுசெயலாளர் பதவி உருவாக்குவதற்கான தீர்மானம் இல்லாததால் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் நிரந்தர அவை தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதோடு, மீண்டும் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பொதுக்குழுவுக்கு தடை பெற ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், பொதுக்குழுவுக்கான அழைப்பிதழை தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் அனுப்பி, கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்த இபிஎஸ் தரப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில், பொதுக்குழு கூட்டம் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் காலை 9:15 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு வர வேண்டும் எனவும், கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவின் முக்கிய அம்சங்கள்:

1. ஜூலை 11 ஆம் தேதி வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் காலை 9.15 மணிக்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கூடுகிறது.

2. அதிமுக உட்கட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட உள்ளது.

3. பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தப்பட உள்ளது.

4. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை பதவி ரத்து செய்யப்பட உள்ளது.

5. அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச்செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

6. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி அதன் மீது விவாதம் நடத்தி முடிவு எடுக்கப்பட உள்ளது.

7. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரை நடைபெற உள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்யப்பட உள்ளார்.

8. அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடுவது தொடர்பான முடிவும் பொதுக்குழுவில் எடுக்கப்பட உள்ளது.

9. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசைக் கண்டித்தும் பல்வேறு தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ளன.

10. பொதுக்குழு உறுப்பினர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அதிமுக தலைமை உத்தரவு.

Leave A Reply

Your email address will not be published.