இமாலய இலக்கை வெற்றிகரமாக துரத்தி இங்கிலாந்து அணி புதிய சாதனை..!

கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில் தொடரை வெல்லும் முனைப்பில் இந்த போட்டியில் களமிறங்கியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றிபெற இந்திய அணி 378 ரன்கள் நிர்ணயித்தது.

இன்று நடந்த கடைசி நாள் போட்டியில் 378 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக துரத்தி இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் சமனில் முடிந்ததால் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

ஜோ ரூட் – பேர்ஸ்டோவ் இருவரும் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்த டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்திய பேர்ஸ்டோவ் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 4 சதங்களுடன் 737 ரன்கள் அடித்து தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார்.

இன்று 28-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த ரூட், 2021 ஆம் ஆண்டிற்கு பிறகு மட்டும் 11 சதங்கள் அடித்துள்ளார். இந்த தொடரில் 23 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியின் தொடர் நாயகனாக கேப்டன் பும்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த போட்டியில் 378 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டியதன் மூலம் இங்கிலாந்து அணி புதிய வரலாறு ஒன்றை படைத்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி தங்கள் வெற்றிகரமான மிகப்பெரிய ரன் சேஸை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் அந்த அணி 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 359 ரன்கள் எடுத்ததே இங்கிலாந்து அணியின் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது இங்கிலாந்து அணி முறியடித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.