காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்தின் செயல் திட்டம் வெளியானது!
காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்தின் செயல்திட்டம் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள போராட்ட மைதானத்தில் “போராட்ட நாள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் 06 கட்டங்களைக் கொண்டதாகவும், போராட்டத்தின் இறுதி இலக்கை அடைவதற்காக அனைத்துப் போராட்டக்காரர்களின் இணக்கப்பாட்டுடன் முன்வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயல் திட்டத்தின் 06 திட்ட முன்மொழிவுகளாவன ,…..
நிறைவேற்று ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச உடனடியாக விலக வேண்டும்.
ரணில் விக்ரமசிங்கவும், ராஜபக்சே ஆட்சி உட்பட்ட அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.
கோட்டா – ரணில் அரசாங்கம் வெளியேறியதன் பின்னர் பொருளாதார, சமூக, அரசியல் இலக்குகள் மற்றும் மக்கள் போராட்டத்தின் நோக்கங்களுக்கு ஏற்றவாறு இடைக்கால நிர்வாகம் அமைய வேண்டும்.
ஜனாதிபதியை அதிகாரத்தில் இருந்து நீக்கிய பின்னர், மக்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பு ஒன்று ஏற்றுக்கொள்ளப்படும் வரை, தற்போதுள்ள அரசியலமைப்பில் செய்யக்கூடிய ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மக்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பு ஒன்று வாக்கெடுப்பு மூலம் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும்.
இடைக்கால அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் மேற்குறிப்பிட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதாகும், மேலும் அதிகபட்சமாக 12 மாதங்களுக்கு உட்பட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் நிர்வாகக் கட்டமைப்பு பூர்த்தி செய்யப்பட வேண்டும்.