ஆஸி. செல்ல முயன்ற நால்வர் வடமராட்சியில் கைது.

யாழ்ப்பாணம், வடமராட்சி, தொண்டமானாறுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாகப் படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட 4 பேர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் கைதுசெய்யப்பட்டனர்.
இராணுவத்தினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டு வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த இருவரும், திருகோணமலையைச் சேர்ந்த இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தொண்டமானாறு இராணுவச் சோதனைச் சாவடிக்கு அருகில், அதிகாலையில் நடமாடிய நால்வரையும் இராணுவத்தினர் விசாரணை நடத்தியபோதே அவர்கள் படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டமை தெரியவந்துள்ளது.
இந்தப் படகுப் பயணத்துக்காக முதல் கட்டமாக ஒவ்வொருவரும் தலா 3 இலட்சம் ரூபா வீதம் பணம் செலுத்தியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.