மிருசுவில் படுகொலை: சுனில் ரத்நாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.

யாழ்., மிருசுவிலில் எட்டு அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவக் கனிஷ்ட அதிகாரியான சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மன்னிப்பு அளித்து விடுவித்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் யஸந்த கோட்டாகொட, தெல்தெனிய ஆகியோர் அடங்கிய ஆயத்தின் முன்னால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்றுப் புதன்கிழமை பரிசீலிக்கப்பட இருந்தது.
நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா என்பது தொடர்பில் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மன்றில் முன்னிலையானார். எனினும், எதிராளியான சுனில் ரத்நாயக்க சார்பான சட்டத்தரணி மன்றில் முன்னிலையாகாத காரணத்தால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மிருசுவிலில் 8 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ‘ட்ரயல் அட் பார்’ நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்க, அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். ஐந்து நீதியரசர்கள் கொண்ட உயர்நீதிமன்ற ஆயம் அவரது மேன்முறையீட்டை நிராகரித்து, ‘ட்ரயல் அட் பார்’ நீதிமன்றம் வழங்கிய மரணதண்டனையை உறுதி செய்திருந்தது. அத்தகைய கைதியையே தாம் பதவிக்கு வந்ததும், தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மன்னித்து விடுவித்து இருந்தார்.