ஈபிஎஸ்-க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி.
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைக்கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருந்தார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானம் இயற்ற தடை பெற்றார்.
ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் நிராகரிப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு இடையே உரசல்கள் எழுந்தது. ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தீர்மானங்களை நிராகரித்தது மற்றும் அவைத்தலைவர் தேர்வு உள்ளிட்டவை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிச்சாமி உள்பட கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்குகள் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.