நாட்டின் முதல் மூன்றாம் பாலின விமானியின் பறக்கும் கனவு உடைந்தது..

நாட்டின் முதல் மூன்றாம் பாலின விமானி என்ற பெருமையை கொண்டவர் ஆடம் ஹாரி. கேரளாவைச் சேர்ந்த இவர் 2019ஆம் ஆண்டு பயிற்சி விமானியாக ஆனார். ஆனால், தற்போதைய விதிகளின் படி மூன்றாம் பாலினத்தவரான இவர் விமானியாக தகுதியில்லை என விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் விமானி ஆக வேண்டும் என்ற ஆடமின் நீண்ட நாள் கனவு உடைந்துள்ளது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இவர் தனது 12ஆவது வயதில் இருந்து தான் பிறந்த பெண் அடையாளத்தை அந்நியமாக கருதத் தொடங்கியுள்ளார். தனது 17 வயதில் தான் எதிர்கொள்ளும் பிரச்னைகளை குடும்பத்தினரிடம் அவர் கூறிய நிலையில், மனநல மருத்துவரிடம் இது தொடர்பாக ஆலோசனை கேட்கப்பட்டது. தனது குடும்ப மற்றும் சமூக சூழலை கருத்தில் கொண்டு தென்னாப்ரிக்கா நாட்டிற்கு குடி பெயர்ந்த ஆடம், அங்கு தனது பாலியல் அடையாளத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த தொடங்கினார். தென்னாப்ரிக்கா நாட்டின் தனியார் விமானி உரிமத்தை பெற்ற இவர் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியா வந்தார். பின்னர், கேரளா அரசு ராஜீவ் காந்தி அகாடமியில் விமான பயிற்சி எடுக்க ரூ.23.7 லட்சம் நிதியுதவி வழங்கியது.

இந்நிலையில், சிகிச்சை மூலமாக பெண்ணில் இருந்து ஆணாக மாறி வரும் இவர் விமானியாக தற்கால சூழலில் தகுதியில்லை என விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இவரின் ஹார்மோன் தெரப்பி சிகிச்சை முடியும் வரை இவருக்கு வாய்ப்பு கிடைக்காது எனவும் ஆணையம் கூறியுள்ளது. ஹாரியின் நேர்காணலின் போது தனது பாலின அடையளம், உறவு, திருமணம் போன்றவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும், அதை எதிர்கொண்டு திருப்திகரமான பதிலை வழங்குவது அவருக்கு சவாலாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்காக தன்னுடைய அடையாளத்தை விட்டுத் தர முடியாது எனக் கூறியுள்ள ஹாரி, தற்காலிகமாக சோமேட்டோவில் டெலிவரி நபராக வேலை செய்து வருகிறார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தை நாட அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.