ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு: சுயநினைவு அற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதி….
உள்ளூராட்சி தேர்தல் பிரசாரத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது சம்பவம்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளார்.
ஜப்பானின் மேற்கு நகர பகுதியான நாரா நகரில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவருக்கு பின்னாலிருந்து இரு முறை இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாகவும், முதலாவது சூடு அவர் மீது படாத போதிலும் இரண்டாவது சூட்டில் அவர் கீழே வீழ்ந்ததாகவும், இதனைத் தொடர்ந்து அபே இரத்தத்தில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து 67 வயதான அபே அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படு காயமடைந்த அவர் எவ்வித அறிகுறிகளும் இன்றி காணப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவர் எனும் வகையில் ஷின்சோ அபே , எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கவுன்சிலர் சபை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாராவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடம் பொலிஸார் விசாரணைகளைள முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அங்கிருந்த நிருபர் ஒருவர் கூறுகையில்..
துப்பாக்கி சத்தம் ஒன்று கேட்டதாகவும் பின்னர் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே குருதி வடிந்த நிலையில் சரிந்து விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் 11.30 மணியளவில் (02:30 GMT) இடம் பெற்றதாகவும் முன்னாள் பிரதமருக்கு சுயநினைவு இருக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.