ஒரே நேரத்தில் ஐடி – விஜிலென்ஸ் ரெய்டால் குழப்பம்!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான செய்யாத்துரை அவரது எஸ்.பி.கே நிறுவனத்தின் வாயிலாகப் பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செய்யாத்துரையின் நிறுவன கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் ஆடிட்டரின் நிறுவனமான மைலாப்பூரில் உள்ள ஜி.பி.ஏ கன்சல்டென்சி அலுவலகத்திலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளைக் கவனிக்கும் ஒரு நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வரும் வேளையில், ஒரு பகுதியாக ஜி.பி.ஏ கன்சல்டன்சி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொள்ளச் சென்றனர்.
இந்நிலையில் செய்யாதுரை வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாகச் சோதனைக்காக அந்த அலுவலகத்திற்கு வந்ததால் அங்கே லஞ்ச ஒழிப்புத்துறையினர் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
அரசு ஒப்பந்ததாரரான செய்யாதுரையின் நிறுவனங்களுக்கும், முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கும் இந்த ஜி.பி.ஏ கன்சல்டன்சி நிறுவனம் தான் கணக்கு வழக்குகளைக் கவனித்து வருவது தெரியவந்துள்ளது.
ஒரே நேரத்தில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.