அரசுக்கு இறுதி அறிவிப்பை விடுக்க சகலரும் திரண்டெழுவோம்!- சஜித் அறைகூவல்
“அரசுக்கு இறுதி அறிவிப்பை விடுக்கும் இன்றைய மாபெரும் ஜனநாயகப் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல நமது முழுப் பலத்தையும் வழங்குவது நம் அனைவரினதும் பொறுப்பும் கடமையும் ஆகும்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“நாட்டினதும் குடிமக்களினதும் நம்பிக்கைகளைத் தகர்த்து ஒட்டுமொத்த நாட்டையும் மிகக் கடுமையான சோகத்துக்குள் தள்ளியுள்ள அரசுக்கு இறுதிச் செய்தியை வெளியிட வேண்டிய தருணம் வந்துவிட்டது. எனவே, நாளைய மாபெரும் ஜனநாயகப் போராட்டத்தின் வலிமையுடன் அரசுக்கு இறுதிச் செய்தியை வழங்க நாம் அனைவரும் ஓரணியில் திரளுவோம்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோட்டாபய அரசின் ஆட்சியின் மூலம் நாடு ஒரு துயரமான நிகழ்காலத்தையும் இருண்ட எதிர்காலத்தையும் பெற்றுள்ளது. இதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இடைவிடாப் போராட்டத்தில் ஈடுபட்டதால், நடுநிலையான சிவில் சமூகத்தில் அரசுக்கு எதிராக பலத்த எதிர்ப்பும் எழுந்தது.
தற்போது அதன் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ளோம். நாளைய மக்கள் போராட்டத்துக்கும், மக்கள் சக்திக்கும், மக்கள் கூட்டணிக்கும் முழு ஆசிகளையும், ஆதரவையும் வழங்குவோம்.
அரசின் தந்திரம் மற்றும் கோழைத்தனமான நடவடிக்கைகளில் சிக்கிக்கொள்ளாமல், நாளைய மாபெரும் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வோம். இந்த ஜனநாயகப் போராட்டத்துக்கு நமது முழுப் பலத்தையும் கொடுப்பது நம் அனைவரினதும் பொறுப்பும் கடமையும் ஆகும்” – என்றுள்ளது.