நிலைகுலைந்த இந்த அரசின் மற்றொரு கோழைத்தனமான செயலே ஊரடங்கு! – ஐக்கிய மக்கள் சக்தி சாடல்

பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நிலைகுலைந்த அரசின் மற்றொரு கோழைத்தனமான செயல் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார்.
அவர் இன்றிரவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
“இந்நாடு ஏற்பட்டுள்ள நிலையைக் கண்டும் காணாதும், சிறிதும் உணர்வோ அல்லது விழிப்புணர்வோ இல்லாத அரசு மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை திடீரென அமுல்படுத்தியுள்ளது.
இந்தக் கோழைத்தனமான அவமானமிக்க செயல் நாட்டின் தற்போதைய நிலைமையை அறிந்த எவரும் எடுக்கக்கூடிய ஒரு முடிவு அல்ல.
இந்நாட்டில் வாழும் பெரும்பாலான மக்கள் வரிசையில் நிற்கின்றனர். சிலர் இரண்டு மூன்று நாட்களாக வரிசையில் நிற்கின்றனர்.
குறிப்பாக மேல் மாகாணங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வரிசையில் நிற்கும் மக்களைத் திக்குமுக்காட செய்யும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமக்கு எதிராக சுனாமி போல் எழும் மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சிய அரசு வெறித்தனமாக நடந்து கொள்வதன் உடனடி விளைவுதான் இந்த அவசர பொலிஸ் ஊரடங்குச் சட்டமாகும்.
அரசின் நிகழ்ச்சி நிரலில் இது போன்ற சீர்குலைக்கும் அடக்குமுறை நடவடிக்கைகள் இன்னும் பல உள்ளன என்பதில் சந்தேகமில்லை.
இதுபோன்ற ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிராக பொலிஸ்துறை இதற்கு முன்பு நீதிமன்றத்தை நாடியிருந்தாலும், நீதிமன்றம் மக்களின் உரிமைகளை ஏற்று அமைதியான போராட்டங்களை நடத்த அனுமதித்துள்ளதோடு, இந்நிலையில் போராட்டத்தை அடக்குவதற்கு முயற்சித்தால் அது பொலிஸ்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்படும் பாரியதொரு தவறாகும்.
பொலிஸ் துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் இதுபோன்ற ஊரடங்குச் சட்டத்தை விதிக்காமல் மக்களுக்காக முன்னின்று அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியதையே மேற்கொண்டிருக்க வேண்டிய செயற்பாடாகும்.
ஜனநாயகப் போராட்டங்களுக்கு இந்தளவு அஞ்சும் அரசு வரலாற்றில் முன்னெப்போதும் இருந்ததில்லை என்றும், அரசின் இத்தகைய கோழைத்தனமான முயற்சிகள் மூலம் மக்களின் உற்சாகம் மேலும் பெருகும் என்றும் அரசுக்குச் சுட்டிக்காட்டுகின்றோம்.
அவ்வாறே, இந்தக் கொடுங்கோல் அரசை விரட்டியடிப்பதற்கான போராட்டத்தை அரசின் இத்தகைய சிறுப்பிள்ளைத்தனமான கோழைத்தன செயல்களால் தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் வலியுறுத்துகின்றோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.