மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மீக வியாதிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல, ஆன்மிக வியாதிகள் என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் இன்று வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, மாற்றுத்திறனாளித்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட 30 துறைகளை சேர்ந்த 1 லட்சத்து 71 ஆயிரத்து 169 பயனாளிகளுக்கு 693 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சி துறை, கூட்டுறவு துறை, வருவாய் துறை, நகராட்சி துறை பள்ளிக்கல்வித்துறை என 14 துறைகளில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு உள்ள 70 கோடி மதிப்பீட்டில் உள்ள பல்வேறு கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
மேலும், வேளாண்மை துறை, கால்நடை துறை, நகராட்சி சார்பில் திருவண்ணாமலை நகராட்சி பேருந்து நிலையம் அமைத்தல் உள்ளிட்ட 9 துறைகளைச் சார்ந்த 340 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு 340 கோடி மதிப்பீட்டில் அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில்திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு சாதனை மலரை முதல்வர் வெளியிட ஆட்சியர் முருகேஷ் பெற்றுக் கொண்டார்.
இதை தொடர்ந்து மேடையில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தாய்மார்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு இருக்கும் இந்த சூழலையும் கட்டுப்பாட்டையும் பார்க்கும் பொழுது இதுதான் திராவிட மாடல் ஆட்சியாக இருக்கிறது என்றும், மலைகள் சூழ்ந்த மாவட்டமாக திருவண்ணாமலை விளங்குகிறது. வரலாற்றுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்த தடையும் கொண்ட மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் என்றும் கற்கால மனிதர்கள் பாறை ஓவியங்கள் உள்ளிட்டவைகள் அதிகம் நிறைந்த மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் என்றும் தெரிவித்தார்.
மேலும், கோவில்களை பாதுகாக்கும் அரசு திமுக அரசு என்றும் பக்தர்களின் எண்ணத்திற்கு ஏற்ப தொல்பொருள் துறையிடம் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மீட்டது கருணாநிதி அரசு என்றும் பெருமிதமாக குறிப்பிட்ட அவர், மதத்தை வைத்து அரசியல் நடத்தும் கண்களுக்கு தமிழக அரசின் திட்டங்கள் கண்களுக்கு தெரியாது. அவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல ஆன்மீக வியாதிகள் என்றும் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஓராண்டு திராவிட மாடல் ஆட்சியில் 13 திருக்கோவிலுக்கு குடைமுழுக்கு நடைபெற்றுள்ளது. 693 கோவில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்டவர்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து அதனை முறைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு ஆவணம் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
அனைத்து துறையும் சமம் என்று நடத்தும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறியவர் பிற்போக்குத்தனம் மற்றும் பொய் பேசுபவர்களுக்கு இது பற்றி புரிந்து கொள்ள முடியாது என்றும் தாங்கள் ஆன்மீகவாதிகளுக்கு எதிரி அல்ல என்றும் ஆன்மிகம் பெயரில் சலசலப்பை ஏற்படுத்துபவர்களுக்குத்தான் எதிரி என்றும் விமர்சனம் செய்தார்.
தாங்கள் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று அறநெறிகளைப் பின்பற்றி ஆளும் ஆட்சியான அறநெறி ஆட்சிதான் தங்கள் ஆட்சி என்றும் அறம் போலி போன்ற பிம்பங்களை வைத்து தாங்கள் ஆட்சி நடத்தவில்லை என்றும் கடுமையாக அவர் விமர்சனம் செய்தார்.
மக்களுக்கு நன்மை செய்யவே தாங்கள் உள்ளதாகவும் திராவிட மாடல் ஆட்சியில் கல்வி சுகாதாரம் தொழிலாளர் புதிய முயற்சி புதிய திட்டங்கள் இதைப் பற்றி சிந்தித்து கொண்டு இருப்பது தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் வீணர்களைப் பற்றி தான் கவலைப்படவில்லை ஐ டோன்ட் கேர் என்றும் மக்களாகிய நீங்களும் ஐ டோன்ட் கேர் ( I Dont Care)என்று சொல்லி நகருங்கள் இலக்கை அடைவோம் என்று கூறினார்.
மக்கள் மட்டுமே நம் எஜமானர்கள் காலம் பொன் போன்றது கடமை பொன் போன்றது ஆகவே அரசு அதிகாரிகள் அனைவரும் கோப்புகளை உடனடியாக நிறைவேற்றி மக்களின் மனசாட்சியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் தன் மீது தமிழக மக்களுக்கு அதிக அளவு நம்பிக்கை அதிகரித்து விட்டதாகவும் ஒடுக்கப்பட்ட தமிழக மக்கள் ஒளிபெற நம்பிக்கை என் மீது அவர்கள் வைத்துள்ளதை நிச்சயம் அண்ணா வழியிலும் கலைஞர் வழியிலும் நிறைவேற்றுவேன் என்றும் அனைத்து வளமும் கொண்ட மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவேன் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
முன்னதாக அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடைக்கு வருகை தந்த அவர் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிகளையும் பார்வையிட்டார்.