மிரட்டல் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி எட்காப்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 46* ரன்களும், ரோஹித் சர்மா 31 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகளையும், ரிச்சர்ட் கிளேசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணி, கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இங்கிலாந்து அணிக்கு மொய்ன் அலி 35 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத டேவிட் வில்லே 33* ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால், 17 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்த போது இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பும்ராஹ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் கெத்தாக கைப்பற்றியுள்ளது.