போராட்டம் முடிவடையவில்லை – ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்னும் ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி உள்ளனர்.
நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்த நேற்றைய தினம், இலட்சக்கணக்கான மக்கள் கொழும்பு நகருக்கு திரண்டனர், இறுதியில் அவர்கள் ஜனாதிபதி மாளிகையையும் ஜனாதிபதி செயலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிந்தது. எனினும் அதற்குள் ஜனாதிபதி பத்திரமாக தப்பிச் சென்றுவிட்டார்.
கடந்த 8ஆம் திகதி பிற்பகல் முதல் செயற்பாட்டாளர்கள் கொழும்புக்கு வரத் தொடங்கியதுடன் களனிப் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இருந்து பாதயாத்திரையாக வந்த பல்கலைக்கழக மாணவர்கள் கோட்டைப் பகுதியில் தொடர்ந்து தங்கியிருந்தனர். அந்த நேரத்தில், அமல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தையும் மீறி காலிமுக மைதானத்திற்கு அருகிலுள்ள கோட்டா கோ கிராம எதிர்ப்பு தளத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.
போக்குவரத்து சிரமங்களுக்கு மத்தியில் நேற்று காலை முதல் கொழும்பு நகருக்கு வருகை தந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதித் தடைகளை உடைத்து, கண்ணீர் புகை, உயர் அழுத்த நீர்த்தாக்குதல்களை தகர்த்து ஜனாதிபதி மாளிகைக்கு வந்து இறுதியாக ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமிக்க முடிந்தது. பின்னர் ஜனாதிபதி செயலகமும் போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இன்று காலையிலும் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தை சுற்றி ஏராளமான மக்கள் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.