‘ஜெயலலிதாவின் அண்ணன் நான்’.. சொத்தில் பங்கு கோரி முதியவர் வழக்கு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதவீதம் பங்கு தரக்கோரி கர்நாடகாவை சேர்ந்த முதியவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவி, தன்னை ஜெயலலிதாவின் சகோதரர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிர் இழந்தார். இதையடுத்து ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு அவரது அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான ஜெ.தீபா, தீபக் ஆகியோரே வாரிசு என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை தனது சகோதரி எனக் கூறி கர்நாடக மாநிலம் வியாசராபுரத்தை சேர்ந்த 83 வயதான வாசுதேவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவிக்கு தான் பிறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட வேதவள்ளி மூலம் பிறந்த ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் தனது சகோதரர், சகோதரி எனவும் உரிமை கோரியுள்ளார்.
ஜீவனாம்சம் கேட்டு மைசூர் நீதிமன்றத்தில் தனது தாய் ஜெயம்மா தொடர்ந்த வழக்கில், வேதவல்லி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஜெயலலிதாவின் சொத்துகளில் தனக்கு 50 சதவீதம் தர வேண்டும் என்றும் தீபா, தீபக் ஆகியோர் மட்டுமே ஜெயலலிதாவின் வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் வாசுதேவன் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.