ஆர்ப்பாட்டக்காரர்களது புரட்சியின் பின் வருவது புதிய சட்டம் – குமார் குணரட்ணம் (காணொளி)
கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைத்த மக்கள் ஆணை இரத்துச் செய்யப்பட்டதன் மூலம் மொட்டு ஆட்சி முடிவடைந்துள்ளதாகவும், அவர்களை மீண்டும் அரசியல் விளையாட்டுகளை ஆட தயாராக வேண்டாம் எனவும் முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் தெரிவித்தார்.
எனவே மொட்டுவில் உள்ள அனைவரும் ஒதுங்கி நின்று, புதிய அரசியல் பயணத்திற்கு இடையூறு விளைவிக்க முயலக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் , அவர்களுக்கு முட்டுக் கொடுக்க வந்த ரணில் மற்றும் ஏனையோரும் இதுவரை மக்கள் பட்ட துன்பங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். மொட்டு கட்சியின் ஆணை முடிந்து விட்டது. அவர்களிடம் பாராளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மையை பாவித்து விளையாட முற்பட்டால் அது ஒரு தவறான முனைப்பு என சொல்லி வைக்கிறோம்.
69 லட்சம் வாக்காள மக்கள் அவர்களை நிராகரித்துள்ளார்கள். எனவே முன்னால் தலைமைகளின் விளக்கில் வெளிச்சம் காணும் அனைவருடைய மென்டேட்டும் முடிந்து விட்டது. அது நேற்றோடு முடிந்து போனது.
மக்கள் தந்த ஆணையை மக்களே திரண்டு வந்து பறித் தெடுத்துள்ளார்கள்.
20ம் திருத்தச் சட்டத்துக்கு கை உயர்த்திய அத்தனை பேரும் இனி ஒதுங்கி இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை. ஆர்ப்பாட்டக்காரர்களது ஆதரவோடு 6 மாதம் அல்லது 1 வருட ஆட்சியை தரவிருக்கும் பாராளுமன்ற கட்சிக்கு தடையாக மொட்டு கட்சியில் எவரும் இருக்கக் கூடாது.
மீண்டும் பழைய அரசியல் யாப்பை தூக்கிக் கொண்டு யாரும் வர வேண்டாம்.
ஆர்ப்பாட்டக்காரர்களது புரட்சிக்கு பின்னர் நடைமுறைக்கு வருவது புதிய சட்டம். இன்று புதியதொரு அரசியல் யாப்புக்கு வழி உருவாகியுள்ளது. அதை செய்ய வழி விட வேண்டும்.இனிவரும் காலங்களில் மக்களது விருப்பங்களை நிறைவேற்றும் அதிகாரம் அல்லது அரசியல் முறைமை ஒன்றே செயல்படுத்தப்படும் என்றார் முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம்.