தமிழ் எம்.பிக்கள் ஒன்றுகூடி தக்க தீர்வை முன்வையுங்கள் – ஆறு. திருமுருகன் வேண்டுகோள்.
“சகல தமிழ்க் கட்சிகளும் குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் ஒன்று கூடி இன்றைய இலங்கை அரசியல் சூழலில் நாம் எடுக்கவேண்டிய தீர்மானம் என்ன என்பதை சீராகத் தீர்மானிப்பதற்கு முன்வாருங்கள்.”
– இவ்வாறு தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“வடக்கு – கிழக்கு, மலையகம், தெற்கு தமிழ் நாடாளுமன்ற அக்கத்தவர்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து மக்களுக்காக ஒன்றுகூட வேண்டிய தருணம் இது. எனவே அறிவுபூர்வமாகத் தீர்க்க தரிசனத்தோடு ஒன்றுகூடி ஆராயுங்கள். இது காலத்தின் கட்டாயம்.
இவ்வேளை நீங்கள் ஒன்றுகூடி ஆராய மறுப்பீர்களானால் அது மாபெரும் வரலாற்றுத் தவறாகும். எங்களுக்குள் பலவாய் பிரிந்து வெறுங்கையோடு நின்ற வரலாற்றை மாற்றி, பொருத்தமான தீர்மானங்களை எடுக்க ஆயத்தமாகுங்கள்.
ஆட்சியைத் தீர்மானிக்கப் போகும் எவருடனும் பெறுமதியான தீர்மானத்தை முன்வைப்பதற்கு ஒன்று கூடுங்கள். உங்களை மக்கள் மிக அவதானத்தோடு காத்திருக்கின்றார்கள்.
இன்று ஒன்றுபடாவிடில் என்றும் உங்களால் பயன் கிட்டுவது எளிதல்ல.
தமிழ் மக்கள் சார்பில் எந்த அரசியலும் இல்லாத பொது மகனாக இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன்” – என்றுள்ளது.