‘யாழ் ராணி’ சேவை ஆரம்பம்.
யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடையே ‘யாழ். ராணி’ என்ற விசேட ரயில் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரச பணியாளர்கள் மற்றும் அறிவியல்நகர் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு வசதியாக இந்தச் சேவையை ரயில் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
‘யாழ். ராணி’ ரயில் சேவையின் பிரகாரம் காங்கேசன்துறையிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் ரயில் காலை 8.11 மணிக்கு முறிகண்டியை அடையும்.
அங்கிருந்து மீண்டும் காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் ரயில் முற்பகல் 11.20 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.
மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் ரயில் மாலை 4.10 மணிக்கு முறிகண்டியை வந்தடையும்.
முறிகண்டியிலிருந்து மீண்டும் 4.40 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் இரவு 7.20 மணிக்கு காங்கேசன்துறையைச் சென்றடையும்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஒரு வழிக் கட்டணமாக 90 ரூபாவும், யாழ்ப்பாணத்திலிருந்து பளைக்கு 60 ரூபாவும், யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமத்துக்கு 35 ரூபாவும் அறவிடப்படும்.