10 மாத குழந்தைக்கு ரயில்வேயில் வேலை.. நெகிழ வைத்த இந்திய ரயில்வே
சத்திஸ்கர் மாநிலத்தில் பெற்றோரை இழந்த 10 மாத குழந்தைக்கு ரயில்வே வேலை வழங்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநில பிஹாலி பகுதியில் உள்ள ரயில்வே யார்டில் ராஜேந்திர குமார் என்பவர் வேலை செய்துவந்தார். கடந்த ஜூன் ஒன்றாம் தேதி ராஜேந்திர குமார் தனது மனைவி, 10மாத பெண் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் கணவன்,மனைவி இருவரும் உயிரிழந்தார். இந்த விபத்தில் இவர்களின் 10 மாத குழந்தை மட்டும் உயிர் பிழைத்துள்ளது.
குழந்தைக்கு ரயில்வே துறை சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன. பொதுவாக அரசு துறையில் இருப்பவர் பணியின்போது உயிரிழந்தால் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில், ராஜேந்திர குமாரின் 10 மாத குழந்தைக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 4 அன்று, ராய்ப்பூர் ரயில்வே கோட்டத்தின் தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் பணியாளர்கள் துறையில் (SECR) கருணை பணி நியமனத்திற்காக 10 மாத பெண் குழந்தை பதிவு செய்யப்பட்டது.
கருணை அடிப்படையில் ரயி்ல்வே துறை 10 மாதக் குழந்தைக்கு வேலை வழங்குவது இதுதான் முதல்முறையாகும். ரயில்வே பதிவேடுகளில் அதிகாரப்பூர்வ பதிவைக் குறிக்க ரயில்வே அதிகாரிகள் குழந்தையின் கைரேகைகளை எடுத்துள்ளனர். குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடைந்ததும் அவர் ரயில்வே வேலைக்கு சேர்த்துகொள்ளப்படுவார்.