என்னை பழைய பழனிசாமியாக நினைக்காதீர்கள் – இபிஎஸ் பரபரபப்பு பேச்சு

அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் தொட்ட நிலையில், அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தப்பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோரை நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்ட நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழு கூட்டத்தில் 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்கவும், தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பதிலாக துணைப்பொதுச்செயலாளர் பதவி உருவாக்கம் செய்யப்படுகிறது என்றும், கே.பி.முனுசாமியை துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பின்னர் கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக பொதுக்குழுவில் எல்லோரும் எதிர்பார்த்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நான் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களைத்தான், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துக்கொண்டிருக்கிறார் என்றார்.

இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும் என்று நம்பிக்கை தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, கடுமையாக உழைப்பேன் என்றும் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றுவேன் எனவும் கூறினார்.

ஜெயலலிதா நினைத்ததை செவ்வனே நிறைவேற்றுவேன். கடுமையாக உழைப்பேன். உங்கள் எண்ணங்களை நிறைவேற்றுவேன் எனவும் உறுதியாளித்தார். மேலும், தற்போது, எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை பெருகியுள்ளது. இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர் என்று கூறி திமுக அரசு குற்றம் சாட்டி பேசினார்.

இந்நிலையில், திமுகவின் கைக்கூலி ஓபிஎஸ் என்பது நிரூபணம் ஆகிவிட்டது என காட்டமாக பேசிய இபிஎஸ், என்னை பழைய பழனிசாமியாக நினைக்காதீர்கள் என்றும் ஆக்ரோஷமாப் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.