குஜராத்தில் போலி ஐபிஎல் மேட்ச்.. ரஷ்யா சூதாட்டக்காரர்களை ஏமாற்றி மோசடி
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போலியாக ஐபிஎல் போட்டிகளை நடத்தி ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிகம் பணம் புழங்கும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது. சில நேரங்களில் போட்டிகளின் முடிவுகளை தீர்மானிக்கும் வகையில் சூதாட்டங்களும் நிகழ்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தற்போது, குஜராத் மாநிலத்தில் போலியாக ஒரு ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், மொலிபூர் கிராமத்தில் 21க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றுவதற்காக போலியாக ஐ.பி.எல்தொடர் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில், விவசாய கூலிகள், தொழிலாளர்கள் ஆகியோர் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளின் வீரர்கள் ஜெர்சியை அணிந்து விளையாடியுள்ளனர்.
ஐபிஎல் என்ற யூடியூப் பக்கத்தில் இந்த போலி ஐபிஎல் போட்டிகள் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டுள்ளது. இதில் விளையாடிய விவசாய கூலிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஒரு போட்டிக்கு ரூ.400 வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கான சூதாட்டத்தில் ரஷ்யாவின் Tver, Voronezh மற்றும் Moscow ஆகிய நகரங்களில் உள்ள ரஷ்யர்கள் ஈடுபட்டுள்ளனர். டெலிகிராம் சமூக ஊடகம் மூலம் பெட்டிங் செய்யப்பட்டுள்ளது.
போட்டியைப் பார்ப்பவர்களுக்கு எவ்விதமான சந்தேகமும் எழுந்துவிடக் கூடாது என்பதற்காக ஹர்ஷா போக்லே குரலில் மிமிக்கிரி செய்து கமெண்டரியும் கொடுத்து வந்துள்ளனர். ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்புவது போன்ற ஓசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. உண்மையான ஐபிஎல் தொடர் முடிந்த மூன்று வாரங்களுக்கு பின்னர் இந்த ஐபிஎல் நடத்தப்பட்டுள்ளது.
போலி ஐ.பி.எல் போட்டி தொடர்பாக 4 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவில் வேலை செய்து இந்தியா திரும்பிய Shoeb Davda, இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.