பத்திரிகையாளர்களை தாக்கிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஸ்பெண்ட் (Video)
கடந்த 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் குழுவை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகேவை பணி இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரச ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் குழுவொன்று தாக்கப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற நான்கு ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் முதலில் தாக்குதல் நடத்தியதுடன், பின்னர் அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க வந்த ஊடகவியலாளர்கள் குழுவையும் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் சிரச ஊடக நிறுவனத்தின் 7 ஊடகவியலாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் மற்றும் தாக்குதலை தடுக்க தவறியதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மீது குற்றம் சுமத்தப்பட்டதுடன், பொது சேவை ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் பொலிஸ் மா அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரியை பணி இடைநீக்கம் செய்துள்ளார்.