மஹிந்த, பஸில் கூட்டணியினர் வெளிநாடு செல்லத் தடையா?
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் டபிள்யூ.டி. லக்ஸ்மன் ஆகியோருக்கு உயர்நீதிமன்றின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மனுதாரர்கள் இன்று சட்டத்தரணி ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டத்தரணி உபேந்ர குணசேகரவின் ஊடாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இந்தக் காரணங்கள் தொடர்பில் தற்போது அவசரமான நிலை காணப்படுவதால், எதிர்வரும் 14ஆம் திகதி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த மனுவை கடந்த 6ஆம் திகதி ஆராய்ந்த நீதிமன்றம், ஜூலை 27ஆம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்குத் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இந்த வேளையில் இந்தத் தரப்பினர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றால் அது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இந்த மனுவை இன்று பரிசீலித்த உயர்நீதிமன்றம், இந்த மனுவை எதிர்வரும் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளது.