என்னை கேட்காமல் வரவு செலவு கணக்கை மேற்கொள்ளக்கூடாது – அதிமுக கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு ஒபிஎஸ் கடிதம்
என்னை கேட்காமல் வரவு செலவு கணக்கை மேற்கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிமுக செயற்குழு பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்றைய பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் இருந்து நீக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு, பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டார். புதிய பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், நான் தான் ஒருங்கிணைப்பாளர். என்னை நீக்குவதற்கு பழனிசாமிக்கோ, முனுசாமிக்கோ அதிகாரம் இல்லை.எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நான் நீக்குகிறேன்” என்றார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் வங்கி கணக்கு வைத்திருக்கும் கரூர் வைஸ்யா வங்கி மேலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டத்தின் படி இன்று வரை தான் தான் ஒருங்கிணைப்பாளர், நான் தான் பொருளாளர் என குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் போது என்னை கேட்காமல் எந்தவித வரவு செலவு கணக்கையும் மேற்கொள்ள கூடாது என குறிப்பிட்டுள்ளார். மீறி வரவு செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.