வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்ற கோட்டாவும் விரட்டியடிப்பு.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும் இலங்கையின் குடிவரவு பணியாளர்கள் அதனைத் தடுத்தனர் என்று உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகமான ஏ.எப்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இதையடுத்து கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவியும் சர்வதேச விமான நிலையத்துக்கு அடுத்துள்ள இராணுவத் தளத்தில் நேற்றைய இரவைக் கழித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 13ஆம் திகதி பதவி விலகுவதாகவும், அமைதியான அதிகார மாற்றத்துக்கான வழியைத் தெளிவுபடுத்துவதாகவும் ஏற்கனவே அவர் உறுதியளித்திருந்தார்.
எனினும், அவர் தப்பிச் செல்லாமல் தமது சொந்த நாட்டிலேயே சிக்கியுள்ளார் என்று .எப்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
73 வயதான ஜனாதிபதி கோட்டாபய, கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, தாம் பதவி விலகுவதற்கு முன் வெளிநாடு செல்ல விரும்பினார் என்று நம்பப்படுகின்றது.
எனினும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டை முத்திரையிட மறுத்துவிட்டனர்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவும் இன்று அதிகாலை வெளிநாட்டுக்குச் தப்பிச் செல்ல முயற்சித்த வேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகளால் தடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் திரும்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பிரபுக்களுக்கான பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தில் இன்று காலை முதல் மறு அறிவித்தல் வரை பணிகளில் இருந்து விலகியுள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற மற்றும் நெருக்கடி நிலை மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரசியல் பிரமுகர்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்தப் பட்டுப்பாதை அனுமதி முனையத்தைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பலமான சாத்தியக்கூறுகளைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.ஏ.எஸ். கனுகல தெரிவித்துளார்.
இதனால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து மத்தள மஹிந்த ராஜபக்ச விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளும் தமது கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோருக்கு விமான நிலையங்களின் ஊடாகத் தப்பிச் செல்ல முடியாத நிலையில், கடற்படைக் கப்பல் மூலம் இந்தியா அல்லது மாலைத்தீவுக்குச் செல்வதே தற்போதுள்ள வழியாகும் என்று பாதுகாப்புத் தரப்பை கோடிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.