கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க விசா கோரிக்கை நிராகரிப்பு!
அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அமெரிக்க விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக தி ஹிந்து செய்தித்தாள் மற்றும் SBS செய்தி சேவை வெளிப்படுத்தியுள்ளன.
அமெரிக்க விசாக்களுக்கான மேல்முறையீடுகள் நிராகரிக்கப்படுவதாக SBS செய்திச் சேவை தெரிவித்திருந்தது. அவர்கள் தெரிவித்த உண்மைகள் பின்வருமாறு,
2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்த கோட்டாபய ராஜபக்ச, வார இறுதியில் கலிபோர்னியாவுக்குச் செல்ல விசா வழங்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்தார், ஆனால் அது நிராகரிக்கப்பட்டது என்பதை அமெரிக்க இராஜதந்திர வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அவரது மகன், மருமகள் மற்றும் பேரன் அமெரிக்க குடிமக்கள் மற்றும் இன்னும் அங்கு வாழ்கின்றனர்.
உடனடி குடும்ப உறுப்பினரின் மரணம் அல்லது அவசர மருத்துவ சிகிச்சை போன்ற மிகவும் விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர, அமெரிக்க குடியுரிமையை துறந்த ஒருவருக்கு வருகையாளர் விசாவை வழங்க முடியாது என்பதை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நினைவுபடுத்தியதாக இராஜதந்திர வட்டாரம் SBS சிங்கள சேவையிடம் தெரிவித்தது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ஷ தனது கடவுச்சீட்டை தொலைத்துவிட்டதாக தெரிவித்தவுடன் புதிய அமெரிக்க கடவுச்சீட்டைப் பெறுவதற்கு இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் உதவி செய்துள்ளது.
பசில் ராஜபக்சவின் நிதி முகாமைத்துவம் மீதான எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் இராஜினாமா செய்வதற்கு முன்னர் நிதி அமைச்சர் பதவியை வகித்தார்.
அவரும் அவரது சகோதரர் ஜனாதிபதி ராஜபக்ஷவும் கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து தப்பிச் சென்ற போது, அவர் தனது கடவுச்சீட்டை விட்டுச் சென்றதாக SBS செய்தி சேவை மேலும் தெரிவிக்கிறது.