உலக சாம்பியன் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த இந்திய அணி.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறியது. பும்ராஹ் மற்றும் முகமது ஷமியின் பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 110 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது.
இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ராஹ் 6 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் வெறும் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான், மற்ற வீரர்களுக்கு வேலை வைக்காமால் தாங்களாகவே இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்ததன் மூலம் இந்திய அணி 10 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 76 ரன்களும், ஷிகர் தவான் 31 ரன்களும் எடுத்தனர்.
இந்தநிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனான இங்கிலாந்து அணியை, அதன் சொந்த மண்ணில் அதுவும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்த இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் இந்திய அணியையும், இந்திய அணியின் இந்த வெற்றிக்கு காரணமான பும்ராஹ், ஷமி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களையும் பாராட்டி வருகின்றனர்.